8 Jun 2015

நீ கெட்டவன்

கனவுன்னு சொன்னாலே அது உன்னோடது தான்,
சோ, (அடச்சே, இது அவர் இல்லை, அவளுக்கு அரசியல் எல்லாம் தெரியாது. இது இங்கிலீஷ் So, என்ன இருந்தாலும் அவ தமிழ் பொண்ணு இல்லையா) உன்னோட கனவு, கொடும் கனவுன்னா நீ கொடும் மனம் கொண்டவன், அதாவது நீ ஒரு கெட்டவன் என்று சொன்னாள்.

“நீ ஒரு கெட்டவன்” என்று சொன்னபோது அவளது சிரிப்பு எனக்குப் பிடித்தது



அப்பாடக்கர் வாசகர்...

நண்பர் தான். ஆனால் எப்போது பேசினாலும் வாய்பிளக்க வைத்து விடுவார். இவ்வளவு விவரத்தை எப்படி தெரிஞ்சு வைச்சிருக்கீரு என்று பல தடவை கேட்டுள்ளேன்.

இப்போது ஒரு கதையைப் படிதாலும், இதே களத்தில், இதே கருவில், எதுவும் கிடைக்காவிட்டார் அதே தெருவில் நடந்த கதை என்று ஒரு பழைய கதையை அவர் சொல்லும்போது, நாமெல்லாம் இலக்கியத்தில் எங்கே இருக்கிறோம் என்று யோசிக்க வைத்து விடுவார். எப்பேற்பட்ட கதையையும் ஜஸ்ட் லைக் தாட் விமர்சனம் செய்வார்.

அதுக்கு என்ன இப்பொ, சரி சரி சொல்கிறேன். இன்னிக்கு ஒரு லின்க் அனுப்புயிருந்தார். சரி அதைப்பற்றி ஏதோ சொல்லப்போகிறார் என படித்தேன். 

ச்சும்மா சொல்லக்கூடாது செம்ம கேவலமாக இருந்தது. வழக்கமாக அவர் தானே கிழித்து தோரணம் கட்டுவார், இது நான் அடிப்பதெற்கென்றே அளவெடுத்து செய்தது போல இருந்தது.

இவ்வளவு கேவலமாக எழுதுவது யாரென்று பெயர் பார்க்கலாமென்றால், அதிர்ச்சி, அது அவர் பெயர். அவரது படைப்பு என எனக்கு படிக்க அனுப்பியிருக்கிறார்.

அப்பாடக்கர் வாசகர்கள் ஏன் இப்படி அப்பாவி எழுத்தாளர்களாக இருக்கிறார்கள் என நினைத்து யோசனையில் மூழ்கினேன்.



11 May 2015

கருப்பு பாலித்தீன் பை

வெங்காயதோல் முட்டை ஓடு இதெல்லாம் ரோஜா செடிக்கு நல்லது, மண்ணில் தோண்டி வைக்க வேண்டும்.  
ஆரஞ்சு தோலைக் காயவைத்து பயன் படுத்தலாம். இந்த அட்டைப்பெட்டி இருக்கிறதே, இதில் பொம்மை செய்து விளையாடக் கொடுக்கலாம், ஒரு பத்து நிமிட வேலை தான். 

அப்போது அந்த கருப்புநிற பாலித்தீன் பை கண்ணில் பட்டது. எல்லாவற்றையும் அதில் போட்டு மாநகராட்சி குப்பைத் தொட்டியில் சேர்த்தேன். வேலை முடிந்தது. நிம்மதி. 

ரோஜா செடிக்கு தோட்டமும் , ஆரஞ்சு தோல் பயன்படுத்த பெண்ணும், பொம்மையில் விளையாட குழந்தையும் வேண்டுமே. சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்க அதெல்லாம் என்ன கருப்பு பாலித்தீன் பையா.. 



7 May 2015

வெறுப்பு வளையம்

[ஒரு வாரந்திரிக்கான கதை]

அவன் தான் பொய் சொல்றான்னு தெரியுதே, நீ பதில் சொல்லாம, இப்படி விட்டுட்டியே..

சொல்லியிருக்கலாம், ஆனால் அவன் என் நண்பன்.

நண்பன்னா பொய் சொல்லலாமா, நீ கேக்க மாட்டியா, அப்புறம் எதுக்கு நண்பன்ட்ட விவாதம் பண்ணுற.

இந்த விவாதத்துல அவனுக்கு ஏதாவது சொல்ல இருக்கும்னு நெனச்சு விவாதம் ஆரம்பிச்சேன். ஆனா, எப்போ அவன் பொய் சொன்னானோ, அப்போவே அவனுக்கு சொல்றதுக்கான விஷயம் இல்லன்னு தெரிஞ்சுடுச்சு.

அதை அவன்கிட்டயே சொல்ல வேண்டியது தானே.

கண்டிப்பா அதை செய்யக்கூடாது, கேட்குற நமக்கே அது பொய்னு தெரியும்போது அவனுக்குத் தெரியாதா.

அதுக்காக..

ஆமா.. யாருக்குமே பொய் சொல்ல பிடிக்காது. அதை வெறுப்பாங்க. இந்த விவாதம் ஆரம்பிச்சு, ஒரு இடத்துல அவன் பொய் சொல்லுற நிலைமைக்குத் தள்ளினது நாம தானே. அதனால பொய் சொல்ல சொல்ல, நம்மையும் வெறுக்க ஆரம்பிச்சுடுவாங்க.

ஓ 

ஆமா, நாம நண்பர்களா நீடிக்க ஒரே வழி அது தான். இந்த விவாத்த அப்படியே விட்டுடுறது தான்.


29 Aug 2014

கொஞ்சம் நம்பலாமே

முடிதிருத்திக்கொண்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்தேன். அதற்காகவே காத்திருந்த மழை சடசடவென ஆரம்பித்துவிட்டது. நான் முன்போலல்ல வீட்டுக்குச் சென்றவுடனேயே குளித்துவிடுவேன் என்று சொல்லிப்பார்த்தாலும் மழை என்னை நம்புவதுபோலில்லை.

நாம் இயற்கையை நம்புவதுபோல் இயற்கையும் நம்மை நம்ப வேண்டுமென்பதே எனது வேண்டுகோள்.

27 Aug 2014

முதல் பீதி

உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு இருக்கிறது.  கொஞ்சமாவது தன்னுணர்வு இருக்கும் யாருக்கும் அந்த பால்யகால முதல் பயம் நினைவிருக்கவேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஏன் இரவு வருகிறது, இரவில்லாமல் ஏன் நாள் என்பது படைக்கப்படவில்லை. அப்படியே இரவு வந்தாலும் ஏன் தூங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று யோசிக்காத நாளில்லை அப்போது. அதற்குக்காரணம் இரவில் வரும் கொடும் கனவுகள்.

இப்போது நினைதுப்பார்த்தால் தூக்கத்தின் மீதான மனவிலக்கமே கனவாக வந்து பயம்கொள்ள செய்ததோ எனத்தெரிகிறது. காலப்போக்கில் குழந்தைப்பருவ பரபரப்பெல்லாம் போனபின் சோம்பேறித்தனமும் தூக்கமும் நம்மை ஆட்கொண்ட பிறகு, கனவுகள் பிடிக்க ஆரம்பிக்கின்றன. 

அப்படியென்றால் நீ இப்போது கனவு காண்பதில்லையா? கண்டிப்பாக இப்பொதும் கனவு இருக்கின்றது, அதைக் கலைத்து முன்னேறுவதில் தான் வாழ்க்கை இருக்கிறது.

இவன் கொடும் கனவுகளைக் கலைப்பவன். அப்படியென்றால் நல்ல கனவுகளை?

என்ன விளையாடுகிறீர்களா கனவு என்றாலே அது கொடும் கனவுதானே? அது உங்களுக்கு எவ்வளவு பிடித்திருந்தாலும்.